கப்பல் மீது அடுத்தடுத்து தாக்குதல்!
மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதிலிருந்து வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 16 – திங்கள்கிழமை ஹார்முஸ் நீரிணையில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற பனாமா நாட்டுக் கொடி ஏந்திய MT TARA GAS என்ற எல்பிஜி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த ஒட்டுமொத்த மாலுமிகளும் கப்பலைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
21 இந்தியர்கள் ஓமனில் பத்திரமாக மீட்பு!
இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் ஓமனின் கசாப் (Khasab) பகுதிக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த இரண்டு மாலுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய ஒரு இந்திய மாலுமியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாயமான மாலுமியைக் கண்டறியவும், மீட்கப்பட்ட மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யவும் கப்பல் நிர்வாக நிறுவனம் மற்றும் பிராந்திய மீட்புக் குழுக்களுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
தேடுதல் பணியில் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம்!
ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் உதவி மற்றும் ஆதரவு வழங்கிய ஓமன் அரசுக்கும் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியப் போரில் 4 இந்திய மாலுமிகள் மாயம்!
மேற்கு ஆசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை நான்கு இந்தியக் கப்பல் பணியாளர்கள் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு சர்வதேச நீர்வழிகளில் தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 102 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 11 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.




