ஆசியான் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச இ-விசா – பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியா – ஆசியான் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்னணு விசா வழங்குவது, கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

இலவச இ-விசா வழங்க பிரதமர் மோடி முன்மொழிவு!

இந்தியா – ஆசியான் உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், சுற்றுலா, தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி, இளைஞர் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டங்களை முன்மொழிந்துள்ளார். மணிலாவில் நவம்பர் 17 – செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 23-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்த முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்னணு விசா (E-Visa) வழங்கப்படும் என பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

நீண்டகால கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம்!

இந்தியா – ஆசியான் நாடுகளுக்கு இடையே நீண்டகால கடல்சார் ஒத்துழைப்புத் திட்டத்தை உருவாக்கவும் பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். இதில் கடல்வழிப் போக்குவரத்து இணைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடலோரக் காவல்படை ஒத்துழைப்பு, கடல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடற்பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம், அணுசக்தியில் புதிய ஒத்துழைப்பு!

பிராந்திய நாடுகளின் திறனை மேம்படுத்தும் வகையில் கூட்டு இணைய தடயவியல் பயிற்சித் திட்டத்தை (Cyber Forensics Training Programme) செயல்படுத்தவும் மோடி பரிந்துரைத்துள்ளார். மேலும், அணுசக்தித் துறையில் தொழில்நுட்பப் பரிமாற்றம், ஆசியான் – இந்தியா விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் சுரங்கத் தொழில், முக்கிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்காக புதிய திட்டம்!

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான இளைஞர்களின் தொடர்பை அதிகரிக்கும் நோக்கில், ‘ஆசியான் – இந்தியா யூத் கனெக்ட்’ (ASEAN-India Youth Connect) என்ற முன்னெடுப்பை பிரதமர் முன்மொழிந்துள்ளார். இதன் கீழ் இளைஞர் உச்சி மாநாடு, இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹேக்கத்தான் என்பது தொழில்முனைவோர், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் குழுக்களாக இணைந்து புதிய தொழில்நுட்பத் தீர்வுகள், வணிக யோசனைகள் அல்லது மாதிரிகளை உருவாக்கும் நிகழ்வாகும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு!

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான கல்வி உதவித்தொகைகளை அதிகரிக்கவும் பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். மேலும், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் (World Audio Visual and Entertainment Summit) ஆசியான் – இந்தியா படைப்பாற்றல் கூட்டாண்மை அரங்கம் (Creative Partnership Pavilion) அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆசியான் அமைப்பின் பின்னணி!

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) என்பது பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிராந்திய அமைப்பாகும். 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்தே மற்றும் வியட்நாம் என மொத்தம் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆசியான் அமைப்பின் பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளாக உள்ளன.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கு முக்கியத்துவம்!

ஆசியான் நாடுகளுடனான உறவு இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ (Act East Policy) யின் முக்கிய அம்சமாக உள்ளது. 1992-ம் ஆண்டு துறைசார் கூட்டாண்மையாகத் தொடங்கிய இந்தியா – ஆசியான் பேச்சுவார்த்தை உறவு, 1995-ம் ஆண்டு முழுமையான பேச்சுவார்த்தைக் கூட்டாண்மையாகவும், 2002-ம் ஆண்டு உச்சி மாநாட்டுக் கூட்டாண்மையாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு மூலோபாயக் கூட்டாண்மையாகவும், 2022-ம் ஆண்டு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாகவும் (Comprehensive Strategic Partnership) மேம்படுத்தப்பட்டது.

தற்போது ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிலிப்பைன்ஸ், மணிலாவில் வருடாந்திர ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி, இளைஞர் தொடர்பு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பிரதமர் மோடி முன்மொழிந்துள்ள திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.