காற்று மாசுபாட்டைத் தடுக்கும் மின்சார ஆட்டோக்கள் – மஹிந்திராவுக்கு சர்வதேச விருது!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களித்து வருவதாக மஹிந்திரா நிறுவனத்துக்கு, 2026-ம் ஆண்டுக்கான எர்த்ஷாட் விருது அளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவுக்கு எர்த்ஷாட் விருது!

இந்தியாவின் முன்னணி மின்சார சிறு வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி (Mahindra Last Mile Mobility), 2026-ம் ஆண்டுக்கான எர்த்ஷாட் விருதை வென்றுள்ளது. மின்சார ரிக்ஷாக்களை வாங்குவதற்கும் இயக்குவதற்கும் குறைந்த செலவில் கிடைக்கச் செய்வதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளை வழங்கி வருவதற்காக, ‘நமது காற்றைப் பாதுகாப்போம்’ (Clean Our Air) என்ற பிரிவில் இந்நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற விருது விழா!

எர்த்ஷாட் விருதின் ஆறாவது ஆண்டு விழா நவம்பர் 17 – செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இதில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் ஆகியோர் கலந்து கொண்டனர். விருது வழங்கும் நிகழ்ச்சியில் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுமன் மிஸ்ரா விருதைப் பெற்றுக்கொண்டார்.

இளவரசர் வில்லியம் தொடங்கிய இந்த எர்த்ஷாட் விருது, காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு காணும் புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஐந்து பிரிவுகளில் 15 காலநிலை சார்ந்த தீர்வுகள், 20 தனிநபர்களின் பங்களிப்புகளுடன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு தங்களது புதுமையான முயற்சிகளை விரிவுபடுத்துவதற்காக தலா 10 லட்சம் பவுண்டுகள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

விருது வென்ற மற்ற நிறுவனங்கள் மற்றும் நாடுகள்!

கடல் வளங்களைப் பாதுகாக்கும் பிரிவு (Revive Our Oceans): ஐக்கிய இராச்சியத்தைவிடப் பெரிய கடல் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியூவே ஓஷன் வைட் டிரஸ்ட் (Niue Ocean Wide Trust) இந்த விருதை வென்றது. சுமார் 1,700 மக்கள் தொகையைக் கொண்ட பசிபிக் தீவு நாடான நியூவே, கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நீண்டகாலப் பாதுகாப்புக்காகப் புதுமையான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மீன் வளம் 60 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், கடலோர சமூகங்களும் பயனடைந்துள்ளன. அந்த அமைப்பின் தலைவர் கோரல் பாசிசி விருதைப் பெற்றுக்கொண்டார்.

கழிவுகள் இல்லாத உலகை உருவாக்கும் பிரிவு (Build a Waste-Free World): நுகர்வோர் பொருட்களில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைத் தடை செய்வதற்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களே தூய்மைப்படுத்தும் செலவை ஏற்கச் செய்வதற்கும் தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இயக்கம் நடத்திய PFAS-Free France அமைப்பு விருதை வென்றது.

காலநிலையைச் சீரமைக்கும் பிரிவு (Fix Our Climate): டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டெட் (Orsted) நிறுவனம் இந்தப் பிரிவில் விருதை வென்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மையமாகக் கொண்டு தனது வர்த்தகச் செயல்பாடுகளை மாற்றியமைத்ததன் மூலம், நேரடி கார்பன் உமிழ்வை 98 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. முன்னதாக ஐரோப்பாவின் அதிக நிலக்கரி பயன்பாடு கொண்ட எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயற்கையைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் பிரிவு (Protect and Restore Nature): இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பூடான் நாடு இந்த விருதை வென்றது. சுமார் 8 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு, இயற்கைப் பாதுகாப்பைத் தனது அரசியலமைப்பிலேயே இடம்பெறச் செய்துள்ளது. இந்நாட்டின் காடுகள், தெற்காசியாவில் கீழ்நிலைப் பகுதிகளில் வாழும் 160 கோடி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இமயமலை நீர் அமைப்பைப் பாதுகாக்க உதவுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.