துருக்கிக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா கடும் எதிர்ப்பு!

ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான தீர்மானத்தின் ஆலோசனைகளில் இந்தியாவைப் புறக்கணித்த துருக்கியின் செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் (Organisation of Islamic Cooperation – OIC) இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான தீர்மான வரைவு, திங்கள்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஈராக் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது. துருக்கி (Turkiye) இதற்கான ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 112 நாடுகளும், எதிராக 6 நாடுகளும் வாக்களித்தன. மேலும், 39 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. இந்தியா, ஆர்மீனியா, சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

ஆலோசனையில் இந்தியாவைப் புறக்கணித்த துருக்கி!

இந்தத் தீர்மானம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடப்பட்ட வரைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் பிரதிநிதிகளை OIC-யின் நிரந்தரப் பார்வையாளர் தூதரகம் திட்டமிட்டு விலக்கியதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் குற்றம்சாட்டினார். இதுகுறித்து வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிய அவர், தீர்மானத்தின் உள்ளடக்கத்தைத் தாண்டி, அதற்கான பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்த துருக்கியின் செயல்பாட்டு நடைமுறைகளும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், வெளிப்படைத்தன்மையும், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஆலோசனைகளும் இல்லாமல் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்தியா மட்டுமின்றி வேறு சில நாடுகளும் ஆலோசனைகளில் இருந்து விலக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். குறிப்பிட்ட சில நாடுகளைப் பேச்சுவார்த்தையில் இருந்து விலக்கி வைத்து, தங்களது விருப்பத்திற்கேற்ப செயல்திட்டங்களை முன்னெடுப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்ட நாடுகள் – இந்தியா குற்றச்சாட்டு!

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின்போதும் சில நாடுகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ததாகவும், இருப்பினும் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்க்காமல் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டதாகவும் யோஜ்னா படேல் தெரிவித்தார். மேலும், நாடுகள் அளித்த கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட அடிப்படை நடைமுறைகளும் வெளிப்படையாகப் புறக்கணிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இது தவறுதலாக நடந்தது அல்ல; திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது என்றார்.

ஐக்கிய நாடுகள் சபை இறையாண்மை சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகிய அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும், அதற்காகப் பொதுச் சபை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளில் இருந்து குறிப்பிட்ட நாடுகளைத் திட்டமிட்டு விலக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் சபைத் தலைவருக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் OIC அமைப்புக்கு இந்தியா எதிர்ப்பு!

தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்தும் இந்தியா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மற்ற மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்காக OIC அமைப்பின் பங்களிப்பை இந்த அளவுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பது தெளிவாக இல்லை என்றும், OIC என்பது பிராந்திய அமைப்பு அல்ல என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற OIC பெண்கள் விவகாரங்களுக்கான 9-வது அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்ததற்கும் இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அந்தப் பிரகடனத்தையும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் இந்தியா நிராகரிப்பதாக யோஜ்னா படேல் கூறினார். இந்தியாவைக் குறித்த தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான குறிப்புகள் பல்வேறு ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளதாகவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக OIC அமைப்பு தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு OIC அமைப்புக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடிய இந்தியா!

பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்ட இந்தியா, ஒரு உறுப்பு நாடு தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இந்தியாவுக்கு எதிராக OIC தீர்மானங்களையும் பிரகடனங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் வகையில் அந்த அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக வழிநடத்த அனுமதித்திருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தது. 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட OIC அமைப்பில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினராகவும், முக்கிய உறுப்பினராகவும் உள்ளது.

OIC அமைப்பு நடுநிலைத்தன்மை, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அதன் முடிவுகள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. மேலும், மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாடும் தனது குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்தை இந்தியா ஏற்கவில்லை என்றும் யோஜ்னா படேல் தெரிவித்தார்.

துருக்கியின் செயல்பாட்டுக்கு கிரீஸ், சைப்ரஸ் எதிர்ப்பு!

இந்தியா மட்டுமின்றி, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் நாடுகளும் தீர்மானத்துக்கான பேச்சுவார்த்தைகளில் துருக்கி வெளிப்படைத்தன்மையுடனும், அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டின. சைப்ரஸ் நாட்டின் பிரதிநிதி பேசுகையில், இந்தத் தீர்மானம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களிலும், பேச்சுவார்த்தைகளிலும் தங்களது நாடு மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தையும் பேச்சுவார்த்தையில் இணைப்பது என்பது ஒருங்கிணைப்பாளரின் அரசியல் விருப்பத்தைப் பொறுத்த விஷயம் அல்ல; அது ஐ.நா. சாசனத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படைக் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். கிரீஸ் நாட்டின் பிரதிநிதியும் துருக்கியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். ஐரோப்பிய ஒன்றியம் நல்லெண்ண அடிப்படையில் கருத்துகளையும் திருத்தங்களையும் முன்வைத்தபோதும், அவை முறையாகப் பரிசீலிக்கப்படவில்லை என்றும், திருத்தப்பட்ட தீர்மான வரைவுகள் போதிய ஆலோசனையின்றிப் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தீர்மானத்தில் மாற்றம் வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

அமெரிக்காவும் இந்தத் தீர்மானத்தின் தற்போதைய வடிவம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் OIC தொடர்பான தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது, தேவையற்ற மற்றும் மீண்டும் மீண்டும் இடம்பெறும் வாசகங்களையும், சர்ச்சைக்குரிய அம்சங்களையும் நீக்கிவிட்டு, ஒருமித்த கருத்தை எட்டக்கூடிய நேரடியான மற்றும் நடைமுறை சார்ந்த ஒத்துழைப்புப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வாக்கெடுப்புக்குப் பிந்தைய விளக்கத்தை அளித்த அயர்லாந்து, ஆலோசனை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையும் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இது பலதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.