இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 18) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயலாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கடந்த நவம்பர் 16-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 17-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் அக்வான் (Akvan) புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் நிலவியது. தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், நேற்று (நவம்பர் 17) காலை 8.30 மணி அளவிலும் அதே பகுதியில் நிலவியது.

மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

அக்வான் புயல் மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19-ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20-ம் தேதி ஆந்திராவில் கரையைக் கடக்கிறது!

அக்வான் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20-ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இதன் காரணமாக இன்று (நவம்பர் 18) சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென் தமிழகத்திலும் லேசான மழை!

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், ஏனைய வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.