முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை 2020 ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அவர் 2021 ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழ் நாடு பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து. அதே போல் அண்ணாமலையும் தமிழ் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்ட அரசியல் கட்சி தலைவரானார்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி -அண்ணாமலை இடையே மோதல் ஏற்பட்டது. இது 2024 ஆம் ஆண்டு என்.டி.ஏ கூட்டணியில் இருந்து அதிமுக விலக வழிவகுத்தது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு என்.டி.ஏ கூட்டணியில் இணைய மீண்டும் அதிமுக முடிவு செய்தது. ஆனால் அண்ணாமலையை தலைவர் பதவியை விட்டு நீக்கவேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழ் நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமாலை மாற்றப்பட்டார். மேலும் அப்பொறுப்பில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து கட்சியில் அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்த போதும் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்தன.
இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவல்களின் படி, அக்கட்சிக்கு ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல வெளியாகியுள்ள மற்றொரு தகவலின் படி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.







