திருச்சிக்கு இன்று செல்லும் முதலமைச்சர் விஜய்…!

முதலமைச்சர் விஜய் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று திருச்சி செல்கிறார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இடதுசாரிகளின் ஆதரவின் மூலம் அக்கட்சி ஆட்சியமைத்தது. தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஆனால் விதிகளினால் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடிவெடுத்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று திருச்சி செல்கிறார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி தவெக சார்பில் அக்கட்சியினருக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே அனுமதி, முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாயை பின்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் யாரும் வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.