“தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, பிரதிபலிக்கிறார்களோ அதன்படிதான் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செயல்படுவார்” என அதிமுக எம்.பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், ஜூலை மாதம் 11 தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதோடு ஜீன் 23 க்கு முன் இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், “இன்று வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பை அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். என்னை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தொடரக்கூடாது என கடிதம் அளித்தனர். அதற்கு நானும் கழக ஒருங்கிணைப்பாளரும் மறுப்பு கடிதம் அனுப்பினோம். அதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெற்ற ஒரே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நான் அந்த வெற்றிக்கு நன்றி கடனாக தமிழகத்தினுடைய கோரிக்கைகளையும் தேனி மக்களுடைய கோரிக்கைகளையும் அதேபோல பாரத பிரதமர் கொண்டு வரும் அத்தனை திட்டங்களையும் வலியுறுத்தி பேசியுள்ளேன். அதுவே எனது பணி. இனி வரும்காலங்களிலும் அதை சிறப்பாக செய்வேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஒன்றுகூட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த பேசிய அவர், “ அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஒருங்கிணைப்பாளர் பேசியுள்ளார். அரசியலில் இன்று ஒன்றும் நாளை ஒன்றுமாக நிகழும். அதனால் நான் அதை சொல்ல முடியாது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, பிரதிபலிக்கிறார்களோ அதன்படிதான் ஒருங்கிணைப்பாளர் செயல்படுவார்” என பேசியுள்ளார்.







