கடந்த ஜூலை11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் இபிஎஸ் தரப்பினரால் எடுக்க முடிவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறிப்பிடும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த உத்தரவைப் பெறும் வகையில் ஓபிஎஸ் தரப்பு கடந்த 11ந்தேதி மற்றும் அதற்கு முன்பு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு எடுத்துவைத்த வலுவான வாதங்கள் என்னவென்றும் பாரப்போம்.
கடந்த ஜூலை11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக் குழு கட்சி விதிகளுக்கு முரணானது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை, கட்சியில் பொதுச் செயலாளர் பதவியை இனி உருவாக்க முடியாது என்று 3 முக்கிய அம்சங்களை தங்களது வாதமாக ஓபிஎஸ் தரப்பு முன்வைத்தது. இந்த மூன்று விஷயங்களை எடுத்துரைப்பதற்காக கீழ்க்கண்ட வாதங்கள் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன
பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் தரப்பு வாதம்
1) அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே கூட்ட வேண்டும்.
2) பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கவில்லை
3) ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டதையும், பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டதையும் எப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்?
4) நிகழ்ச்சி நிரல் தயாரித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டுவர வேண்டும்.
5) ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது ஜூலை 11ந்தேதி அடுத்தப் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து முன்மொழிந்தவர்கள் அல்ல.
6) 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்த ஓபிஎஸ் தரப்பு வாதம்
1) கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் கட்சிவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
2) ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை. பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை
3) ஒட்டுமொத்தமாக அதிமுகவின் அமைப்புத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே காலாவதியாகியிட்டதாக எப்படி கருதமுடியும்?
4) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக கருதினால் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளும் காலாவதியாகிவிட்டதாகத்தானே அர்த்தம்.
5) 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை
தேர்வு செய்யத்தான்
6) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்
7) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் இபிஎஸ் தரப்பினர் கூறினார்கள். ஆனால் ஜூன் 23ந்தேதி நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுக்க அவரது பெயர் முன்மொழியப்பட்டபோது எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என்றே அழைத்தார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.
பொதுச் செயலாளர் பதவி தொடர்பான ஓபிஎஸ் தரப்பு வாதம்
1) கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், தொண்டர்களின் விருப்பப்படி கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என அறிவிக்கப்பட்டு, அந்த பதவி ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது.
2) அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக
முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக
இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்று இபிஎஸ் தரப்பினர் திருத்தம் செய்ததை ஏற்க முடியாது
இப்படி பல்வேறு கோணங்களில் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்கிற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ஜூன்23ந்தேதிக்கு பின்னர் மேற்கொண்டபோதெல்லாம் தாம்தான் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதை தொடர்ந்து கூறிவந்தார் ஓபிஎஸ். தற்போது நீதிமன்ற உத்தரவு மூலம் அதனை உறுதிப்படுத்தி தமது ஆதரவாளர்களை உற்சாகமடையவைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
-எஸ்.இலட்சுமணன்







