கோவை பெரியார் அறிவுகத்தில் புத்தக கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் பெயரில், கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் இன்றைய முதலமைச்சர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட அந்த நூலகத்தில், ‘AI’ மூலம் பிழைகளுடன் தயாரிக்கப்பட்ட போலி நூல்களைப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடியிருப்பது மன்னிக்க முடியாத அறிவுத் துரோகமாகும்.
போலிப் பெயர்களைப் பயன்படுத்தித் தகுதியற்ற நூல்களை நூலகத்திற்குள் திணித்து அரசு கஜானாவைக் கொள்ளையடித்த மோசடி நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது பாரபட்சமின்றி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தவறிழைத்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.
அந்த நூலகத்திலுள்ள நூல்கள் அனைத்தையும் முழுமையாகத் தணிக்கை (Audit) செய்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வர, துறைசார் வல்லுநர்கள் அடங்கிய தனிக்குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தகுதியற்ற நூல்களை அப்புறப்படுத்தி, அதற்காக வழங்கப்பட்ட அரசு நிதியை முழுமையாகத் திரும்பப் பெற (Recover) வேண்டும். மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஏமாற்றும் இந்த மோசடி விவகாரத்தில் அரசு தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதையும், மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு விஜய் அவர்களுக்கு உண்டு.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




