இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடிய தன்வி!
செனகலின் டக்கார் நகரில் நடைபெறும் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி பத்ரி, சீனாவின் ஜாங் யி சினை எதிர்கொண்டார். சுமார் 82 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் தன்வி 15-21, 21-13, 24-26 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். முதல் செட்டில் 15-21 எனப் பின்தங்கிய தன்வி, இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடி 21-13 என வெற்றி பெற்று ஆட்டத்தைச் சமன் செய்தார்.
மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 10-19 எனப் பின்தங்கியதால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத தன்வி, தொடர்ந்து போராடி ஐந்து மேட்ச் பாயிண்ட்களைத் தடுத்து 24-24 எனப் புள்ளிகளைச் சமன் செய்தார். அதன்பிறகு தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான மூன்று வாய்ப்புகளையும் பெற்றார். ஆனால், கடைசி நேரத்தில் சீன வீராங்கனை ஜாங் யி சின் சிறப்பாக விளையாடி 26-24 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தன்வியின் பயணம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. மூன்றாம் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய அவர், காலிறுதியில் தாய்லாந்தின் ஏழாம் நிலை வீராங்கனையான ககானிக் குங்கேவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21-17, 21-13 என்ற நேர் செட்களில் 39 நிமிடங்களில் வெற்றி பெற்ற தன்வி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இளைஞர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
அரையிறுதியில் ஜப்பானின் இரண்டாம் நிலை வீராங்கனையான யுசுனோ வதனாபேவை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய தன்வி, இரண்டாவது செட்டில் 11-21 எனத் தோல்வியடைந்தார். இதையடுத்து நடைபெற்ற தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இந்திய பேட்மிண்டனில் புதிய மைல்கல்!
ஒடிசாவைச் சேர்ந்த 15 வயது தன்வி பத்ரி, பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டாலும், உலக ஜூனியர் சாம்பியனான சீன வீராங்கனைக்கு எதிராக இறுதிவரை போராடிய அவரது ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இளைஞர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையுடன் தன்வி பத்ரி இந்திய பேட்மிண்டனில் புதிய மைல்கல்லைப் பதித்துள்ளார்.




