ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல்-ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல் நிலவுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் மற்றும்…

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற முடியாத சூழல் நிலவுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு,  கடந்த 2021 டிசம்பர் மாதம் அம்மா தான் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அதை அங்கீகரித்துவிட்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த உத்தரவை புறம்தள்ளிவிட்டு அவை தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நம் வேட்பாளரை திரும்பப் பெற்றோம். இவ்வுளக்கு பிறகும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற முடியாத நிலை நிலவுவதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.  அதிக அதிகாரம் அளவு கடந்த போதையை தரும்.

அநியாயம், அதர்மம், அராஜகம், அதிகார போதை, ஆணவம் ஆகியவற்றின் மூலம் அதிமுகவை அபகரிக்கும் கும்பலை தடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அஇஅதிமுக என்னும் தொண்டர்கள், மக்கள் இயக்கத்தை சர்வாதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என்றும் அஇஅதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டு வரும் நிர்வாகிகளின் பணியை மேலும் துரிதப்படுத்தி விரைவில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி , வட் கிளை நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.’ என கூறப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.