இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து ராகுல் நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரரான ராகுல் மோசமான ஃபார்மில் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடைசி 12 இன்னிங்ஸ்களில் ராகுல் 198 ரன்களே எடுத்துள்ளார். நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் 3 இன்னிங்ஸ்கள் சேர்த்தே 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து சொற்ப ரன்கள் எடுத்து மோசமான விதத்தில் அவர் அவுட் ஆவது சர்ச்சையாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்,”கடந்த 20 வருடங்களில் எந்த ஒரு இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் ராகுலை போல குறைந்த சராசரியுடன் விளையாடியதில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதனால் கில், சர்ஃபராஸ், மயாங்க் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ராகுல் மோசமான பார்மில் உள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடி திறமையை வளர்த்து, மீண்டும் இந்திய அணிக்கு வருவதுதான் சரியாக இருக்கும். “ என கூறியிருந்தார். “எனவே ராகுலை நீக்கிவிட்டு அஸ்வினை துணை கேப்டனாக்குவதுடன், திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.” என பலரும் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல்டிராவிட், ரோஹித் சர்மா, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
“ராகுலின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. கடைசி இரண்டு போட்டிகள் நடந்தவை பேட்ஸ்மேன்களுக்கு சவாலான மைதானம். சுமையை குறைக்கும் விதமாகவே ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை.” என்று கூறியுள்ளனர். விரைவில் அடுத்த துணை கேப்டனை ரோஹித் தேர்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா