ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து – டிரம்ப் அதிரடி அறிவிப்பு….!

ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மேற்காசியாவில் போர்பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் நேற்று ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஈரான் உடனான இடைக்கால போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற 2026 நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், “என்னைப் பொறுத்தவரை, இது (அமைதி ஒப்பந்தம்) முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் ஈரானியர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள், கொடூரமான, வன்முறை குணம் கொண்ட மக்கள்.

நேற்று இரவு நாங்கள் அவர்களை மிகவும் சக்திவாய்ந்த முறையில் தாக்கினோம். அவர்களிடம் ஏதோ சரியில்லை. ‘போய் உங்கள் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்’ என்று நாங்கள் சொல்கிறோம், ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் நேற்று கப்பல்கள் மீது ராக்கெட்டுகளை வீசத் தொடங்கினார்கள்.

“வெளிப்படையாகச் சொல்வதானால், அவர்களுடன் என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. இப்போது, ​​நமது அருமையான பேச்சுவார்த்தையாளர்கள் விரும்பினால் தொடர்ந்து பேசட்டும், ஆனால் எனக்கு அதில் எந்தப் பார்வையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, அவர்களுடன் பேசுவது நேர விரயம் மட்டுமே. அவர்கள் பொய்யர்கள்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.