குவைத் மீது ஈரான் தாக்குதல் ; இந்தியர் ஒருவர் பலி.!

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான்  தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குவைத்தில் உள்ள மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம்  வெளியிட்டுள்ள செய்தியின் படி, குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் உள்ள சேவைக் கட்டிடத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதன் விளைவாக, இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன், அந்த நிலையம் கணிசமான அளவு சேதமடைந்துள்ளது.

இந்திய தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில்,  ”நேற்று குவைத்தில் உள்ள ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஓர் இந்தியக் குடிமகன் துயரமான முறையில் உயிரிழந்தமைக்கு, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காக, இந்தியத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது” கூறியுள்ளது.

இந்த உயிரிழப்பினால் மேற்காசிய போரில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.