19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 27-வது லீக் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 59 ரன்களும், மற்றொரு வீரர் ஹெய்ன்ரிச் கிளாசென் 39 பந்துகளில் 59 ரன்கள் விளாசினர். சென்னை அணி சார்பில், அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜாமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை விரட்டி களமிறங்கியது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







