மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மேற்கு வங்காளத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதியான இன்று 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29ம் நதேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு மையங்களுக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 75 லட்சம் பேர் பெண்கள், 465 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். தேர்தலில், 2 ஆயிரத்து 450 கம்பெனி (2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளும் மிகுந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்காற்ற நான் வலியுறுத்துகிறேன்.

மேற்கு வங்காளத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.