சென்னையில் 2.30 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் – தனிவரிசை கோரி மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய டிக்கெட் விற்பனை 9.30 மணிக்கு முடிந்தது.  ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி வரும்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய டிக்கெட் விற்பனை 9.30 மணிக்கு முடிந்தது. 

ஐபிஎல் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 2.30 மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்பனை முடிந்தது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் வாங்க தனி வரிசை அமைக்கவில்லை என கூறி அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சேப்பாக்கம் மைதான நிர்வாகம் சார்பில், வீல் சேரில் வருபவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் சேகர் தேஷ்முக்-யிடம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை பற்றி கேட்டபோது அவர்  ”இன்று ஐபிஎல். டிக்கெட்டை முறைகேடாக வாங்க முயன்ற நான்கு நபர்களை கைது செய்துள்ளோம். முறைகேடாக டிக்கெட் வாங்க முயன்ற ஒரு நபரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் முறைகேடாக ஐபிஎல் டிக்கெட் வாங்கிய காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.