அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் எங்கு நடக்கும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு, விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று பாராட்டு விழா நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 ஆம் எண் கொண்ட சிஎஸ்கே ஜெர்சியை அவர் பரிசளித்தார். இந்த விழாவில் பேசிய தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில்தான் நடக்கும் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா பேசும்போது, ’ சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த தருணம் வெகு தொலைவில் இல்லை. 15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடக்கும். அதில் புதிய அணிகள் இணைந்திருப்பதால் உற்சாகமாக இருக்கும். வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமாக செயல்படுவதற்கு என்.சீனிவாசன்தான் காரணம். அந்த அணியின் காசி விஸ்வநாதன் அணியை ஒன்றிணைக்கும் பசையை போன்றவர். தோனி போன்ற கேப்டன் இருக்கும்போது அந்த அணியை, எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். மகேந்திர சிங் தோனி, இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன். இவ்வாறு ஜெய்ஷா தெரிவித்தார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் டோனி என்றார் .டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுவதற்கு டோனி ஒரு ருபாய் கூட வாங்கவில்லை என்றார். மேலும் கூறிய அவர் அடுத்த ஆண்டு ஐ. பி .எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று கூறினார்.