விசாரணை கைதி ராஜசேகரன் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சம்பவத்தன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் நேற்று ஒரே நாளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை கைதி ராஜசேகரன் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
எந்த வழக்கிற்காக அழைத்து வரப்பட்டார்? வழக்கு தொடர்பாக காவல் நிலைய பதிவேடு மற்றும் ஆவணங்களில் முறையாக ராஜசேகரன் கைது தொடர்பாக பதிவு செய்யப்பட்டதா? சம்பவத்தன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு 30 போலீஸாரிடமும் பதில்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடுங்கையூர் லாக் அப் டெத் விவகாரத்தில் மரணமடைந்த ராஜசேகரின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், ராஜசேகரின் உடலில் 12 இடங்களில் காயம் இருந்தது எனவும், ஆனால் காயம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக உறுதியாகக் கூறமுடியாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








