கோவையில் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது.
கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த கிடங்கில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கிடங்கை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கேமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும்போது குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதால், கால்நடை மருத்துவ குழுவை வரவழைத்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கிடங்கில் சிக்கியுள்ள சிறுத்தை, உணவு எதையும் சாப்பிடாமல் இருப்பதால், ஆக்ரோஷமாக இருப்பதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர். இதையடுத்து குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இன்றும் தொடர்ந்துள்ளது.








