திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருச்சி மாநகரம் மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்குவதால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பஞ்சப்பூரில் ரூ. 850 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு இருந்தது.
அண்மைச் செய்தி: ‘உதவி கோரும் மாற்றுத்திறன் கொண்ட புதுமண தம்பதி’
இந்நிலையில், முதற்கட்ட பணிக்காக ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 350 பேருந்துகள் நிற்கும் வசதி, மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை மையம், வணிக வளாகம், லாரி நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.








