ஆப்கனுக்கு உதவிப் பொருட்களை அனுப்பிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனிஸ்தானுக்கு இன்று 2ம் கட்ட உதவிப் பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது. ஆப்கனிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனிஸ்தானுக்கு இன்று 2ம் கட்ட உதவிப் பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது.

ஆப்கனிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஏராளமானோர் வீடுகளை இழந்து நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று ஆப்கனை ஆட்சி செய்யும் தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், ஆப்கன் மக்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதனையடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றே 27 டன் நிவாரணப் பொருட்களை 2 விமானங்களில் முதல் நாடாக இந்தியா அனுப்பிவைத்தது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் நிவாரணப் பொருட்கள் ஆப்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக குடில், உறங்குவதற்குத் தேவையான பாய், தலையணை உள்ளிட்ட பொருட்கள் இதில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக ஆப்கனுடன் இருந்து வரும் உறவை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், கடினமான இந்த தருணத்தில் ஆப்கன் மக்களுக்கு இந்தியா உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் இருந்து அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சகம் தொழில்நுட்பக் குழுவினரை ஆப்கனுக்கு அனுப்பியுள்ளது.

இந்த குழுவினர் ஆப்கனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தவாறு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட உள்ளது.

இதற்கு தாலிபான்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆப்கன் மக்களுடனான உறவை தொடரும் நோக்கிலும் அவர்களுக்கு உதவும் நோக்கிலும் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் இந்திய அரசின் முடிவை வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.