மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியை, போலீஸ் என மிரட்டி லாரி ஓட்டுநர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த 15 வயதான மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி பள்ளி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியை தேடிவந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் அந்த பள்ளி மாணவியும், அவருடன் ஆண் நண்பர் ஒருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மாணவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அதற்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் அந்த மாணவிக்கு பழக்கம் ஆகியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இப்படி அறியாத பருவத்தில் முளைத்த காதல் காவியம் ஓடி கொண்டிருந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்து பேச ஆசைப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை மாணவி மதுரைக்கு அழைத்துள்ளார். பின்னர் மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு தனது ஆசை காதலன் ஜீவானந்தத்தை பார்க்க சென்றுள்ளார். இருவரும் மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்று முருகனை தரிசித்துள்ளனர். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்து கோவைக்கு சென்று அங்கும் விடுதி எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் இருவரும் கடந்த 10-ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு திரும்பி திரைப்படம் ஒன்று பார்த்து விட்டு நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் காக்கி கலர் பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தான் போலீஸ் என்றும் நீங்கள் யார் என்றும் விசாரித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய இளசுகள், இருவரும் காதலிப்பதாகவும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் இளைஞரை பாதியில் இறக்கி விட்டு மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதோடு, மீண்டும் இருவரையும் அழைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள ஜீவானந்தம் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவானந்தத்தின் தாய், அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பள்ளி மாணவியையும், ஜீவானந்தத்தையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றவர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆண்டனி அலெக்ஸ் என்பதும் இவர் தனியார் பேக்கரி நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததற்காக லாரி ஓட்டுநர் ஆண்டனி அலெக்ஸ் மற்றும் மாணவியின் காதலன் ஜீவானந்தம் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களை நல்ல வழிகளுக்காக பயன்படுத்தாமல், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் ஒருசிலர் தங்களையே இழக்க நேரிடுவதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.