விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார்.
விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன் சண்டையிட்ட எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.
இதையும் படியுங்கள் : பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி
இதனிடையே, விசாரணை நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த உளவு பிரிவு காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால், காவலர்களை வெளியேற்றி அமுதா விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், 324 (பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வகைகளில் காயம் ஏற்படுத்துதல்), 326 (தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வகைகளில் கொடுங்காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.









