தவறான முடிவெடுத்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி காயத்ரியின் உடலில் காயங்கள் இருப்பதால், உரிய விசாரணை நடத்த வேண்டுமென அவரது தந்தை வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான வேலுசாமியின் மகள் காயத்ரி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பில், நான்கரை ஆண்டுகள் படிப்பை முடித்துள்ள நிலையில், நேற்று அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்திலிருந்ததாகவும், அதற்கான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தெரியவந்தது. இதனிடையே, உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த காயத்ரியின் சடலத்தைப் பார்த்துவிட்டுக் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து காயத்ரியின் தந்தை வேலுசாமி கூறியபோது, தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கூறி உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் தனது மகளுக்கு உடல்நலம் சரியில்லாததால், வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்டதாகத் தெரிவித்த அவர், ஆனால் விடுமுறை வழங்கப்படவில்லை எனக் கூறினார். விடுமுறை அளித்திருந்தால் தனது மகள் காயத்ரி உயிரிழந்திருக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.








