அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்ச திட்டம்?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ரஜபக்சவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக அவர் பதவி விலகும் முன்பாக…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ரஜபக்சவுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக அவர் பதவி விலகும் முன்பாக கடந்த ஜூலை 13ம் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரில் 2 வாரங்கள் தங்க அவருக்கு விசா வழங்கப்பட்டது. விசா காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு விசா வழங்கியது.

சிங்கப்பூரில் ஒரு மாதம் இருந்த கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்க்காக் சென்றார். பாதுகாப்பு கருதி வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து போலீசார் ராஜபக்சவை கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால், மனைவி மற்றும் மகனுடன் கோத்தபய ராஜபக்ச வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்.

இதனால், அதிருப்தியில் உள்ள கோத்தபய ராஜபக்ச, இலங்கை திரும்புவது குறித்தும் யோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் வருவதாக இருந்தால், முன்னாள் அதிபருக்கான சலுகைகளோடு அவருக்கு பங்களா ஒன்று ஒதுக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியானது.

எனினும், இலங்கையில் இருந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என ஆலோசனை கூறப்பட்டதால், இலங்கை திரும்பும் முடிவை அவர் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது.

கோத்தபய ராஜபக்சவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரட்டுங்க இதனை தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜபக்சவின் மனைவி லோமோ ராஜபக்ச அமெரிக்க குடிமகள் என்பதால், கோத்தபய ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான கிரீன் கார்டு வாங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கோத்தபய ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உதயங்க வீரட்டுங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.