பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் டீசல் இல்லை என அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
சென்னை முழுவதும் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக டீசல் தட்டுப்பாடு இருந்து வருவதாக பங்க் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். டீசல் கொள்முதல் குறைக்கப்பட்டதாகவும் 100% கொள்முதல் செய்யப்பட்ட இடத்தில் 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்துவிட்டனர் என்று பங்க் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் சிலவற்றில் டீசல் இல்லை என வெளியே பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக, சென்னை மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிப்பு பணிகளை 100 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பணிகள் அண்மையில் சம்பந்தப்பட்ட இந்நிறுவனத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திடீர் கச்சா எண்ணெய் வரத்து குறைவாலும் , தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகளில் உள்ள மந்த நிலை காரணமாகவும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும், சென்னை முழுவதும் இதே நிலை தொடர்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.







