தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு யாரும் ஆதரவாக செயல்படவில்லை என்றும், எச்.ராஜா கூறுவது அனைத்தும் உண்மை கிடையாது என்றும் புதுக்கோட்டையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி
வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் தமிழக முதல்வர் மற்றும் டெல்லி
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திட்டத்தை தொடங்கிவைத்தனர்.
அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட
ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கலந்துகொண்டு முதல்கட்டமாக 558 மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் புதுமை தன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, முதல்கட்டமாக
மாவட்டத்தில் 558 பேருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவிகள்
வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீதம் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் உளவுத் துறை அதிகாரி ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருவதாக ஒரு பகிர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு யாரும் ஆதரவாக செயல்படவில்லை.
எச்.ராஜா உண்மையைப் பேசமாட்டார். அவர் பேசுவது 90% பொய்தான். பேசுவார் இருப்பினும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டு
செல்லப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவர் கூறியது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் இதுகுறித்து, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்படும் என்றார்.
-ம.பவித்ரா








