தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அண்ணாமலை கூறியுள்ளதாவது: சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. H1N1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்.
H1N1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டுமென்று பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா