செக் குடியரசு வீராங்கனை 17 வயதான லிண்டா மற்றும் இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரியல்லா தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடினர்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த நிலையில், இன்று இறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலாவதாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டெஃபானி இணை, ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஜ் இணையுடன் களம் கண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கனடா, பிரேசில் இணை 6-1 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.
இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் கேடயம் வழங்க, ஆ.ராசா எம்.பி, காசோலை வழங்கினார். 2வது இடம் பிடித்த இணைக்குக் கேடயத்தைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினர்.
இவர்களுடன் ஆ.ராசா எம்.பி, அமைச்சர் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்ய நாதன், துறையின் செயலாளர் அபூர்வா, உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்த ராஜ், செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். பட்டம் வென்ற இணைக்குக் கேடயத்துடன் 9லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையும், 2வது இடம் பிடித்த இணைக்குக் கேடயத்துடன் 5லட்சத்து 33ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 30வயதான போலந்து வீராங்கனை மேக்னா லினெட்-யை, 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருவிட்ரோவா எதிர்கொண்டார். சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் போராடி 4-6, 6-3, 6-4 என விளையாடி 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தைக் கைப்பற்றினார் லிண்டா.
WTA தொடரில் லிண்டா ஃப்ருவிட்ரோவா வெல்லும் முதல் சாம்பியன்ஷிப் பட்டம் இதுவேயாகும். அதுமட்டும் இன்றி அறிமுக சென்னை ஓபன் மகளிர் தொடரில் மகுடம் வென்றவர் என்ற வரலாற்றைப் படைத்தார் லிண்டா. சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா ஃப்ருவிட்ரோவாவு-க்கு WTA 280 புள்ளிகள், கேடயத்துடன் 26 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை அமைச்சர் கே என் நேரு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்த லிண்டாவுக்கு வெற்றி பெற்றதற்காகக் கேடயம் வழங்கினார்.
அதே போல 2ஆம் இடம் பிடித்த மேக்னா லினெட்-க்கு WTA 180 புள்ளிகள், கேடயத்துடன் 15 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
பின் சென்னை ஓபன் டென்னிஸ் WTA 250 பட்டத்தை வென்ற லிண்டா ஃப்ருவிட்ரோவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேச்சிய லிண்டா “இதனை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது, அதே சமயம் நான் வெற்றி பெற்றது எனக்கு இன்னும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
போட்டியில் மூன்றாவது செட்டின் போது, 2-4 என இருந்த போது நான் என்னை ஊக்கப் படுத்திக் கொண்டேன். என்னை உணர்ந்த பிறகு, அதன் பின்னர் நான் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் போராடி வெற்றி பெற்றேன்.
சென்னை மக்கள் ஆதரவை இது வரை என் வாழ்நாளில் நான் விளையாடிய போட்டிகளில் பார்த்ததே இல்லை. இந்த மக்கள், இங்கிருக்கும் உணவு வகைகள் அனைத்துமே அற்புதமானவை. அனைத்திற்கும், அனைவரின் ஆதரவிற்கு மிக்க நன்றி” என அவர் பேசினார்.
சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கும் லிண்டா, wta 250 புள்ளிகளை 2021 ஆம் ஆண்டு வென்ற அமெரிக்கா இளம் வீராங்கனையான கோகோ ஃகாப் (17 வயது) அடுத்து, நடப்பாண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.