விலைவாசி உயர்வும் வேலை இல்லா திண்டாட்டமும் நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைக்கின்றன: லாலுபிரசாத் யாதவ்

விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி…

விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு பீகார் தலைநகர் பாட்னாவில் காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் லாலுபிரசாத் யாதவ், அவரதுமனைவியும் முன்னாள் முதல்வருமான ர ப்ரி தேவியும் குத்து விளக்கு ஏற்றி கட்சியின் நிறுவன தினவிழாவை தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய லாலுபிரசாத் யாதவ் கூறியதாவது:
ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. நான் ஐந்து பிரதமர்களைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் பதவிக்கு வருவதற்கு உதவியிருக்கின்றேன். நான் மத்திய அமைச்சர் ஆகி இருக்கின்றேன்.ஆனால், அதைப்பற்றியெல்லாம் இப்போது கவலையில்லை. எதிர்வரும் நாட்களில் இந்த தேசத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். விலை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை இந்த நாட்டு மக்களின் முதுகெலும்பை உடைக்கின்றன.

நாம் ஒரு போதும் பின் தங்கி விடக்கூடாது. நாம் இடைவெளி விட்டு விடக் கூடாது. ஏழைகளுக்காக ஆட்சி செய்வதே எனது ஆட்சியாக இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி முழுமையும் முறையான பயிற்சியில் ஈடுபட வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கின்ற பிரச்னைகளுக்கு எல்லாம் ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு கட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.”
இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் பேசினார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும், அதன் பின்னரும் உடல்நலக்குறைவாக இருந்த லாலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்து இன்றைக்கு லாலு பிரசாத் யாதவ் தனது கட்சியின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.