நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுக தேர்தல்

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம்…

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சி 8 வது வார்ட்டில் யாரும் மனு தாக்கல் செய்யாததால், தேர்தல் நடக்கவில்லை.காஞ்சிபுரம் மாநகராட்சி உள்பட, ஆறு வார்டுகளில் வேட்பாளர்கள் இறந்ததால், தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிப்ரவரி 22-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டனர்.

மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும் இன்று மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், மறைமுக தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியே பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.மறைமுக தேர்தலுக்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இன்று வேட்புமனுக்கள் பெறப்படும் எனவும், போட்டி ஏதேனும் இருந்தால் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மேயருக்கு, மாநகராட்சி ஆணையர் அப்போதே பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், செங்கோல், சங்கிலி மற்றும் அங்கி ஆகியவை மேயருக்கு வழங்கப்பட்டு, இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைக்கப்படுவார். இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்கு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.