உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர தமிழ்நாடு சார்பில் அமைக்கப்படும் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. அதே வேளையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர தமிழ்நாடு சார்பில் அமைக்கப்படவுள்ள குழுவை அனுமதிக்க வேண்டும் என வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே இதுவரை தாய்நாடு திரும்பி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை கடந்து வந்து அதன் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியாவில் 1,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வருவதை உறுதி செய்ய, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட 8 பேரை, இந்த நாடுகளுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இதற்குத் தேவையான அனுமதியை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் விரைவாக வழங்கிட வேண்டுமென்று தனது கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.









