சென்னை மாநகராட்சிக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி
முன்னிலையில் ரிப்பன் மாளிகை மாமன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற
உள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி முன்னிலையில் மாமன்றம் காலை 9.30மணிக்கு கூடுகிறது. மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், வேட்பாளர்களின் பெயர்கள்
வாக்குச்சீட்டில் எழுதப்பட்டு கவுன்சிலர்களிடம் வழக்கப்பட்டும்.
பின்னர், சிவப்பு மையினால் விருப்பமான வேட்பாளர் பெயரை கோடிட்ட பின் மாமன்ற அரங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் , உறுப்பினர்கள் வரிசைப்படி சென்று
வாக்களிக்க வேண்டும். பின்னர் வாக்குப்பெட்டியில் உள்ள சீட்டுகளை உடனடியாக
எண்ணி முடித்து வெற்றிப்பெற்ற வேட்பாளர் பெயர் தேர்தல் அதிகாரியால்
அறிவிக்கப்படும்.
இதனை தொடர்ந்து அப்போதே உறுப்பினர்கள் முன்னிலையில்
மேயருக்கான பதவிபிரமாணம் நடத்தப்படும். பின்னர், தேர்தல் அதிகாரியால்
மேயருக்கு செங்கோல், சங்கிலி மற்றும் அங்கி வழங்கப்பட்டு மேயர் இருக்கைக்கு
அழைத்துச் சென்று அமரவைக்கப்படுவார். ஒருவேளை, ஒரே ஒரு வேட்புமனு மட்டுமே
பெறப்பட்டிருந்தால் அந்த வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக
அறிவிக்கப்படும். இதே நடைமுறையில் தான் துணை மேயர் , நகராட்சி மற்றும்
பேரூராட்சிகளுக்கான தலைவர் & துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தலும் பதவியேற்பு நிகழ்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







