தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றி இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு மிக முக்கியமாகும், ஏன்?
உலக கோப்பை டி20 போட்டியின் மற்றும் ஒரு சுவாரஸ்யமான போட்டியாக பார்க்கப்படுவது நாளை நடைபெறவுள்ள இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள் இடையேயான சூப்பர் 12 குரூப் ஸ்டேஜ் போட்டியாகும். 12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் குரூப் 12 சுற்றின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் நாளைய இந்திய, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி தான் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்பிக்க செய்ய போகிறது என்றால் அது ஒரு வகையில் வேடிக்கையாக தான் இருக்கிறது!
குருப் A, குரூப் B என தலா 6 அணிகளாக பிரிக்கப்பட்ட இரண்டு குழுக்களில், குரூப் A பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும், குரூப் B பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
குரூப் A பிரிவின் சில போட்டிகள் மழையால் ரத்து ஆனதை தொடர்ந்து ஒவ்வொரு அணியின் அரையிறுதி வாய்ப்பிலும் பெரிய சிக்கல் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனேவே நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதை உறுதி செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மீதம் இருக்கும் அணிகளுக்கு, இனி வரும் போட்டிகளின் அடிப்படையில் வெற்றி பெரும் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் விகிதத்தில் மட்டுமே அரையிறுதி வாய்ப்பானது உறுதியாகும்.
அதே சமயம் குரூப் B பிரிவில் இந்திய அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று கடினமாகவே அமையக்கூடும். ஏணெனில் பாகிஸ்தான் தனது இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் தோல்வியுற்றுள்ள நிலையில், இனி வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற தென் ஆப்ரிக்கா அணி நாளை இந்தியாவுடன் தோல்வியடைய வேண்டும்.
ஆகவே நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதில் இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களோ இல்லையோ, பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். சரி, இந்திய அணி இந்த உலக கோப்பை டி20 சூப்பர் 12 ஸ்டேஜ் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நாளைய போட்டியை இந்திய அணி அவ்வளவு சுலபமாக வென்றுவிட முடியுமா?
இந்திய அணி வீரர்கள் நம்பகத்தன்மையுடன் கூடிய பார்மில் இருக்கும் பொழுது, நாளைய போட்டியில் அசால்டாக தென் ஆப்ரிக்கா வீரர்களை வீழ்த்திவிட முடியுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆஸ்திரேலிய மைதானத்தில் தென் ஆப்ரிக்கா வீரர்களின் தற்போதைய பார்ம் தான் பதில் சொல்லும். இது குறித்த ஒரு அலசலை தற்போது பார்ப்போம்!
வொர்த்’தான வெற்றியை கொடுக்குமா பெர்த்
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நாளைய போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 4:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. பெர்த் மைதானத்தை பொறுத்தவரை டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்யும் அணிக்கு கைகொடுக்கும் வகையில், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சேசிங் செய்ய பக்கபலமாக அமையக்கூடிய மைதானம் ஆகும். ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிகப்படியான பவுன்சர் பந்துகளை உபயோகிப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமகும். மறுகணம் பெர்த் போன்ற ஆடுகளங்களில் ஸ்லோயர் பந்துகள் பேட்ஸ்மென்களை திணறடிக்கும் திறன் வாய்ந்தவைகளாக பார்க்கப்படுகிறது.
முதல் இன்னிங்சில் முடிந்த வரை எதிரணியை குறைந்தபட்ச இலக்கை எட்ட செய்ய, பவுலர்கள் பயன்படுத்தும் யுக்தி ஸ்லோயர் பந்துகள் தான். கூடவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த முறை பக்கபலமான ஒரு சூழலே உருவாகியுள்ளது. எனவே நாளைய போட்டியில் டாஸ் மற்றும் பந்துவீச்சு ஒரு முக்கிய பங்கு வகிக்ககூடும்.
எட்டுத்திக்கும் பிளக்கும் இரு அணிகளின் பிரம்மாண்ட பேட்டிங் ஆர்டர்கள்
இந்திய அணியாகட்டும், தென் ஆப்ரிக்கா அணியாகட்டும் இரு அணிகளுக்கும் அடிக்க அடிக்க திகட்டாத டாப் ஆர்டர்கள் இருப்பது இருவருக்கும் உண்டான வலிமையை நம்பிக்கையாக உருமாற்றுகிறது! இந்திய அணியை பொறுத்தவரை கே எல் ராகுல் வேறு ஒரு உலகத்தில் இருந்தாலும் இந்திய அணியின் திருஷ்டி விக்கெட்டான முதல் விக்கெட்டை அவர் பறிகொடுத்து விடுகிறார். ஆனால் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கும் பாரமுக்கு, முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம் 150 ரன்கள் உறுதியாகி விடும்.
அதே போல தென் ஆப்ரிக்கா அணியின் திருஷ்டி விக்கெட்டாக கேப்டன் டிம்பா பவுமா இருந்தாலும் அடுத்தடுத்து, குவிண்டன் டி காக், ரூசோவ், டிருஷ்டன், மார்க்ரம் என சளைக்காத, சாமர்த்தியக்காரர்களை டாப் ஆர்டர்களாக கொண்டுள்ளது தென் ஆப்ரிக்கா. அதே நேரத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடும் தினேஷ் கார்த்திக் போல, உயர்ந்து நிற்கும் மலைக்கு சொந்தமான டேவிட் மில்லர் தென் ஆப்ரிக்கா அணிக்கு நிழல் கொடுக்கிறார். எனவே பேட்டிங்கை பொறுத்தவரை ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை!
வேகமும், விவேகமும் கலந்த பந்துவீச்சு
பந்துவீச்சை பொறுத்தவரை இந்தியா, தென் ஆப்ரிக்கா அணியை விட சற்று குறைவான நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம், முகமது ஷமி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் மட்டுமே ஒரளவு சீரான வேகத்தை செலுத்தும் போது, தென் ஆப்ரிக்கா அணியில் ஆண்ட்ரிக் நோக்கியா, ககிசோ ரபாடா இணை காட்டாற்று வெள்ளம் போல மூன்று ஸ்டம்புகளையும் உற்று நோக்கி செயல்படுவது தான். இந்த இணை ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகத்தை தாண்டிய விவேகத்தை பயன்படுத்துகிறது.
புவனேஷ்வர் குமார் அவ்வபோது தேவையான இடங்களில் கைகொடுப்பது இருந்து வந்தாலும், ஹர்திக் பாண்டியா சில நேரங்களில் பிரதான பந்துவீச்சாளராக செயல்பட நேர்கிறது. இனி வரும் போட்டிகளில் இது போதுமானதாக இல்லாத போது, இந்திய அணியின் இலக்கு நிர்ணயம் 200 ஐ தொட வேண்டிய நிலையிலேயே இருந்தது வருகிறது. எத்தனை கடினமான ரன் ரேட்டில் இந்தியா எதிரணியை கட்டுப்படுத்தி வந்தாலும், தென் ஆப்ரிக்கா அணி போன்ற பலமான அணிகள் முதல் பத்து ஓவர்களை டார்கெட் செய்யும் விதம் வானவேடிக்கைகளை விண்ணில் பாய்க்க செய்கிறது.
சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் சாஹால் அல்லது அக்ஷர் படேல் உள்ளிட்டோர் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி பந்துவீச வரும் போது, டி காக், மார்கிரம் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் இருந்தால் இந்தியாவை திணறடிக்கும் நிலையில் தான் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்கா செஸிங் செய்து கொண்டிருக்கும் போது, இந்திய அணியின் பந்துவீச்சு தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான ஒன்றாகவே அமைந்துவிடும் என்பதில் 60% வாய்ப்பு உண்டு.
இரு அணிகளுக்கான வெற்றி விகிதம்
வானிலையை பொறுத்தவரை நாளைய போட்டியின் போது மழைக்கு 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும், “ஒரளவு மேகமூட்டம் மற்றும் மிதமான (30%) மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தோன்றுகிறது. தெற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிமீ வேகத்தில் காற்று வீசுவது மாலையில் லேசானதாக மாறும்” என்று அந்நாட்டு வானிலை மைய இணையதளம் தெரிவித்துள்ளது. எனவே மழைக்கான வாய்ப்பு குறைவுதான். மாறாக இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தால் தென் ஆப்ரிக்கா அணிக்கு இந்தியாவின் மிதமான பந்துவீச்சு சற்று ஏமாற்றம் அளிக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய அணி சேசிங் செய்யும் பொழுது ஒருவேளை பணி ஒரு காரணமாக இருந்தால் தென் ஆப்ரிக்கா அணிக்கு பீல்டிங் கடினமாக இருக்க கூடும். ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் முதல் 10 ஓவர்கள் என்பது கடினமான சூழலே நிலவும். அதே நேரம் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை போல இந்தியாவுக்கு பலம் கொடுத்தால், நாளைய போட்டியை வென்று இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, நாளைய போட்டிக்கான பிரார்த்தனை என்பது இந்தியாவின் வெற்றிக்காக இந்திய ரசிகர்களை மும்முரமாக்குமோ இல்லையோ, பாகிஸ்தான் ரசிகர்களை நிச்சயம் மும்முரம் ஆக்கும்.








