மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கர்நாடக அரசு ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், தான் கலந்து கொள்வதை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்துள்ளார்.
கன்னட சினிமாவில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்தார். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி வரும் நவம்பர் 1ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக விருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்த உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு, விருதை வழங்க வேண்டும் என ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் தான் கலந்து கொள்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையிலிருந்து நவம்பர் 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணியளவில் பெங்களூர் சென்றடைந்து, இந்த விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.







