இந்திய நாட்டின் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதத்திலிருந்து 6.77 சதவிகிதமாக சரிந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்க விகிதம் 7.41 சதவிகிதத்தில் இருந்து 6.77 சதவிகிதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலைக் குறைவே இதற்கு காரணம் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணவீக்கத்தை 6 சதவிகிதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், கடந்த 10 மாதங்களாக 6 சதவிகிதத்தைத் தாண்டியே பணவீக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு 10 மாதங்களாக ரிசர்வ் வங்கியின் பணவீக்கம், அதன் இலக்கை தாண்டியே இருப்பது கவலையளிக்கும் செய்தியே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். ஏற்கனவே ரிசர்வ் வங்கி 3 காலாண்டுகளாக ஏன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என மத்திய அரசுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.
இதே காலகட்டத்தில், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்க விகிதம் 7.01 சதவிகிதமாகவும், காய்கறிகள் மீதான பணவீக்க விகிதம் 7.7 சதவிகிதமாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்க விகிதம் 9.93 சதவிகிதமாகவும் உள்ளது. அதேபோல் மொத்த விலைக் குறியீடு மீதான பணவீக்க விகிதம் 10.70 சதவிகிதத்திலிருந்து, 8.39 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாத மொத்த விலை குறியீட்டு விகிதம் 7.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.







