கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர்…

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும், நாளையும் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக சாலை மார்க்கமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகை தந்தார். ஒரு வார பயணமாக உதகைக்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 9ம் தேதி வரை உதகை ஆளுநர் மாளிகையில் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் 28 துணைவேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் உதகையில் இன்று தொடகினியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் 3வது இடத்திற்கு வளர்ந்துள்ளதாக கூறினார். இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவதாக தெரிவித்தார். நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக ஆளுநர் கூறினார்.

இந்த கருத்தரங்கில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணை வேந்தர்களிடம் உரையாற்றுகிறார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றி துணை வேந்தர்களுடன் கலந்துரையாடுகின்றனர். இதில் லக்னோ, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.