கர்நாடகாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி நிகழ்ந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சம்பவத்திலிருந்து மத்திய அரசு விழித்துக்கொள்ளாதது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்ற போது இண்டர்லாக்கிங் அமைப்பு செயல்பாட்டில் இருந்ததால் ஓட்டுனர் கடைசி நிமிடத்தில் ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்திருக்கிறார். இது தென் மேற்கு ரயில்வேயின் தலைமை மேலாளர் ஹரி சங்கர் வர்மாவின் கடிதம் வாயிலாக உறுதியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் இண்டர்லாக்கிங் சிஸ்டத்தை வலுப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்து ஹரி சங்கர் வர்மா எச்சரித்திருக்கிறார். இதை உடனடியாக கவனத்தில் கொண்டு அரசு செயல்படுத்தாததே தற்போது 275 உயிர்கள் பறிபோனதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அலட்சியமே காரணம் எனவும் சாகேத் கோகல் குற்றம் சாட்டியுள்ளார்.







