இந்திய பங்குச்சந்தை உயர்வு – இன்றைய நிலவரம்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கடந்த திங்கள் கிழமை மட்டும் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடியை இழந்தனர்.

இந்நிலையில், நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது. நேற்று நிஃப்டி 50 குறியீடு, முந்தைய நாள் முடிவில் இருந்த 22,512.65 புள்ளிகளிலிருந்து 365.80 புள்ளிகள் உயர்ந்து 22,878.45 புள்ளிகளில் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸும் வலுவான ஏற்றத்துடன் தொடங்கி, முந்தைய நாள் முடிவில் இருந்த 72,696.39 புள்ளிகளிலிருந்து 1,516.08 புள்ளிகள் அதிகரித்து 74,212.47 புள்ளிகளில் நிலைபெற்றது.

இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 75,600 புள்ளிகளுக்கும் மேல் சென்றது. நிஃப்டி சுமார் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 23,400 புள்ளிகளுக்கும் மேல் சென்றது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.