சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனியை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் சங்கரன்கோவில் அருகே பருவக்குடி கோதை நாச்சியார்புரத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
கோயிலுக்கு சொந்தமான இடம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செல்லியம்மன் கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் இந்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.








