டி-20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்கும் முன் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், ஐசியூ-வில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் முடிந்து நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது. கடைசி கட்ட ஓவர்களில் ஸ்டோயினிஸும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடும் அதிரடியாக ஆடி, அந்த அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஐசியூவில் இரண்டு நாட்கள், காய்ச்சல், நெஞ்செரிச்சல் காரணமாக இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதனால், இவர் அரையிறுதியில் விளையாட மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது. கடைசி நேரத்தில் உடற்தகுதி பெற்றதை அடுத்து களமிறங்கினர். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு இந்திய மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ள தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.
ரிஸ்வான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சஹீர் சைனுலாப்தீன் என்ற இந்திய மருத்துவர் நுரையீரல் சிறப்பு மருத்துவராக பணியாற்றுகிறார். ‘ரிஸ்வான் இவ்வளவு விரைவாக குணமடைந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

’ஐசியூவில் இருந்தபோது, நான் அரையிறுதியில் விளையாடணும், அணியோட இருக்கணும் என்று கூறிக்கொண்டே இருந்தார் ரிஸ்வான். அரையிறுதியில், நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்தது. அவர் வலிமையானவர், உறுதியானவர். நம்பிக்கையுடன் இருந்தார். அவர் குணமடைந்த வேகம் கண்டு எனக்கே ஆச்சரியம்தான். பொதுவாக குணமடைவதற்கு 5 முதல் 7 நாட்கள் ஆகும். ஆனால் அவர் விரைவில் குணமடைந்தார்’ என்று தெரிவித்திருக்கிரார் டாக்டர் சஹீர்.
குணமடைந்ததும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஸ்வான், தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கி இருக்கிறார்.








