மோகன்லால் நடித்த மரைக்காயர் படம், ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில், மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம், ’மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. தமிழில், இந்தப் படத்துக்கு ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயரின் வரலாறாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குஞ்சாலி மரைக்கார், கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகப் போராடியவர். இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், பிரபு, சுகாசினி, சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறந்த படம், கிராபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை பெற்ற இந்தப் படம், கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.
அப்போதுதான் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு தொடர்ந்து நான்கு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், கேரளாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. மரைக்காயர் படத்துக்கு 80 ஸ்கிரீன்ஸ் மட்டுமே தருவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனால், மரைக்கார் படத்தை ஓடிடி-யில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார். அமேசான் பிரைமுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
The much-awaited 'Marakkar – Arabikadalinte Simham' to be released in Theatres worldwide on the 2nd of December, 2021!@priyadarshandir @antonypbvr @aashirvadcine @impranavlal @SunielVShetty @sabucyril @DOP_Tirru @akarjunofficial
@ManjuWarrier @kalyanipriyan @KeerthyOfficial— Mohanlal (@Mohanlal) November 11, 2021
இந்த முடிவுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடன் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து இந்தப் படம் தியேட்டரில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.








