தாய்லாந்தில் மே 8ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெற்ற தாமஸ் கோப்பை மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
அப்போது, கேள்வி-பதில் முறையில் வீரர்களுடன் அவர் உரையாடினார். வீரர்களும் அவர்களுடைய ஆட்டம் குறித்தும், ஆட்டத்துக்கு பிறகு வெளியே நடந்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். அத்துடன், பிரதமர் மோடி ஆதரவு அளித்து வருவதும் எங்களை பெருமை கொள்ளச் செய்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடிய இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் ஸ்ரீகாந்த் கூறுகையில், “பல பணிகளுக்கு இடையில் எங்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய பேட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விளையாட்டையும் வீரர்களையும் பிரதமர் மோடி தொடர்ந்து கவனித்து வருகிறார். வீரர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாடி வருகிறார். நமது வீரர்களும், வீராங்கனைகளும் வெற்றி பெற்ற பிறகு அவர்களை தொலைபேசியில் உடனடியாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார். 
தோல்வி அடைந்தாலும் அவர் பேசி ஆறுதல் கூறுகிறார். இவ்வாறு அவர் ஊக்கமளிப்பதால் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுகின்றனர். பிரதமரின் செயல் ஒப்பிட முடியாது ஒன்றாகும்” என்றார். கடந்த வாரம் இந்திய பேட்மிண்டன் அணி முதல் முறையாக பெருமைமிக்க தாமஸ் கோப்பையை வென்றது. தாமஸ் கோப்பை 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு, இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவை வீழ்த்தி தாமஸ் கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. “பேட்மிண்டன் வீரர்களின் சாதனைகள் இந்தியாவை பெருமை கொள்ளச் செய்கிறது” என்று அவர்களைச் சந்தித்த பிறகு பிரதமர் மோடி கூறினார்.







