கோவை காந்திபுரத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், திமுக ஆட்சியில் அகல்விளக்கு பதிப்பகத்திடம் ஏழு நாட்களுக்குள் புத்தகங்களை வாங்குவதற்கு பர்சேஸ் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி ஆதாரங்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் மனு அளித்துள்ளது. மேலும் அந்தப் புகார் மனுவில் முக்கியமான 8 கேள்விகளை எழுப்பி அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள பதிவில், “ கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
- இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
- புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
- இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
- கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
- இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
- த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
- புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
- ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




