“மீனவர்கள் உயிரிழப்புக்கு தவெக அரசின் மெத்தனமே காரணம்!” – உதயநிதி குற்றச்சாட்டு!

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மீனவர்கள் உயிரிழப்புக்கு தவெக அரசின் மெத்தனப்போக்கே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

முரசு புயலில் சிக்கி காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்தும், மாயமாகியும் உள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம். உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம்.

புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர். அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த தவெக அரசு உடனே நிறைவேற்றவேண்டும்.

அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.