10 வது ஐசிசி டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அணி 3 வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட முக்கியமான தருணங்களை பற்றி காண்போம்.
வரலாற்றை மாற்றிய இந்திய அணி
டி 20 உலகக்கோப்பை தொடர்களின் 2010 முதல் 2024 வரை இறுதிப்போட்டியில் டாஸ் வெல்லும் அணியே கோப்பையை வெல்லும் என்பது வரலாறு. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் நியூசிலாந்திற்கு இமாலாய இலக்கு நிர்ணயித்த இந்தியா வெற்றியை தன்வசப்படுத்தியது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்றை மாற்றியுள்ளது.
இறுதிப்போட்டியிலும் தொடர்ந்த சஞ்சுவின் ஃபார்ம்
2026 ஆண்டு டி 20 உலக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் சோபிக்க தவறினாலும் சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் சஞ்சு சாம்சன். இறுதிப்போட்டிலும் 46 பந்துகளுக்கு 89 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை கணிசமான அளவுக்கு உயர்த்தினார்.
கடைசி ஓவரில் கலக்கிய துபே
15 ஆவது ஓவரில் சஞ்சு சாம்சனின் விக்கெட் வீழ்ந்த பிறகு அணியின் ஸ்கோர் தேங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் இறுதி ஓவரில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 24 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
15 / 4
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இறுதிப்போட்டியில் அதிக விக்கெட் குறைந்த ரன்கள் என்ற தனது வழக்கான பார்முலாவை பின்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா, தனது முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரவை அவுட்டாக்கினார். போட்டியில் தான் வீசிய 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் முலம் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் லசித் மல்லிங்காவை (38) பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா (40) முதலிடம் பிடித்துள்ளார்.
அக்சார் vs ஃபின் ஆலன்
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 33 பந்துகளில் சதம் விளாசிய ஃபின் ஆலன் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டார். 256 என்கிற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடியான டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் ஆலன் இருவரும் தாக்குதல் அணுகுமுறையை கையாண்டு அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். மேலும் முதல் ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஐந்தாவது பந்தில் ஃபின் ஆலனின் கேட்ச் ஒன்றை ஷிவம் துபே தவர விட்டார்.
இந்த நிலையில் அக்சார் பட்டேல் வீசிய மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் ஃபின் ஆலன், திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கடைசி பந்தில் கேட்ச்
இந்த போட்டியில் கடைசி நிலையில் அபிஷேக் சர்மா வீசிய 19 வது ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து அணியின் பத்தவது வீரரான லாக்கி ஃபர்குசன் லாங்க் ஆனிற்கு அடிக்க அங்கு கச்சிதமாக நின்றிருந்த திலக் வர்மா பவுண்டிரிக்கு முன் லாவகமாக கேட்ச் பிடித்தார்.
முன்னதாக 2007 ஆம் டி 20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட பொழுது ஜோகேந்தர் ஷர்மா வீசிய பந்தை பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டான மிஸ்பா-உல்-ஹக்கின், ஷார்ட் ஃபைன் லெக்கில் அடித்தார். அப்போது அப்பந்தை ஸ்ரீ சாந்த் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் இந்தியா தனது முதல் டி 20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.













