போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் மேலும் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலில் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். 14 நாட்களாக தொடரும் போரில் காஸாவில் பொதுமக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பலியானதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போரால் பாதிப்படைந்து வரும் பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. காஸாவில் வாழ்க்கை சூழல் மோசமடைந்துள்ள நிலையில், அங்கு உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகளை எகிப்து நாடு வழங்க முன்வந்த நிலையில், முதலில் தடுத்து நிறுத்திய இஸ்ரேல், பின்னர் அனுமதி அளித்தது. காஸா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ரூ.832 கோடி நிதியுதவி வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கும் மலாலா!
இதனைத் தொடர்ந்து இந்தியாவும் பாலஸ்தீனத்துக்கு உதவ முன்வந்துள்ளது. காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீன மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








