இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கியது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. கொரோனா காரணமாக 5வது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. 2 அணிகளிலும் கடந்தாண்டை ஒப்பிடும்போது கேப்டனில் தொடங்கி எக்கச்சக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இங்கிலாந்தில் ஜோ ரூட் மாற்றப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் விராட் கோலி மாற்றப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஜஸ்ப்ரித் பும்ரா இந்தப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணி முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது. பிறகு ரிஷப் பன்ட் மற்றும் ஜடேஜா சிறப்பாக ஆடி சதமடித்தனர். கடைசி நேரத்தில் பும்ராவும் அதிரடி காட்ட, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. அந்த அணியின் பேர்ஸ்டோ மட்டும் சிறப்பாக ஆடி சதமடிக்க முதல் இன்னிங்ஸில் அந்த அணி 284 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே ஓப்பனர் சுப்மன் கில், கோலி பெரிதாக சோபிக்காமல் அவுட்டாகினர். புஜாரா மற்றும் பன்ட் அரை சதம் அடித்தாலும் மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டு இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 377 ரன்கள் முன்னிலை எடுத்தது.
இதையடுத்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் செய்தத் தவறை திருத்தி, அந்த அணி சிறப்பாக ஆடியது. குறிப்பாக ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி சதமடித்தனர். அவர்கள் இருவரையும் இந்திய அணியால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் தொடர் 2-2 என்ற நிலையில் சமனாகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச சேஸிங் இதுதான். அதேபோல, எதிரணிக்கு 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து இந்தியா தோல்வியடைவதும் இதுதான் முதல்முறை. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியதால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி தவறவிட்டுள்ளது.
கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்தியாவுக்கு எதிராகவும் அதிரடியாக ஆடி வெற்றி பெறுவோம்.” என்று கூறினார். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பேர்ஸ்டோவும், “இந்திய அணி எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் இதை எட்டுவோம்.” என்று கூறியிருந்தார். சொன்னபடி பேர்ஸ்டோ இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்துவிட்டார். வெற்றியை தவற விட்டதற்கு பயிற்சியாளர் டிராவிட், முன்னாள் கேப்டன் கோலி உள்ளிட்டோரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா









